சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மன நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பில் வெள்ளிக்கிழமை வெளியான பெடரல் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ ஆய்வறிக்கையில்,சுமார் 49 சதவீத சுவிஸ் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மன நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 60 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மன நிலையில் இருந்துள்ளது தெரிய வந்தது.
இதனிடையே, சுவிஸ் உளவிவகார அமைச்சர் Alain Berset வியாழக்கிழமை தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பரப்புரைகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது என்பது கட்டாயமாக்கப்படாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இருப்பினும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியானது இலவசமாகவே வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, மக்களிடையே கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகம் இருப்பதை அரசு கருத்தில் கொள்ளும் எனவும், அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.