Hollandtamilan

உலக மருந்தகம் இந்தியா: 72 நாட்டிற்கு தடுப்பூசி சப்ளை..

கொரோனா தடுப்பூசி மருந்தை 72 நாடுகளுக்கு சப்ளை செய்ததன் மூலம் இந்தியா உலக மருந்தகம் என்ற பெருமைக்கு வலு சேர்த்துள்ளது” என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ராஜ்ய சபாவில் ‘தடுப்பூசி நண்பன்’ திட்டம் குறித்து ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளை 72 நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

இது உலக மருந்தகம் என்ற இந்தியாவின் சிறப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. உலகத் தலைவர்களும் சர்வதேச மக்களும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.தடுப்பூசி நண்பன் திட்டத்தின் கீழ் மாலத் தீவு, பூடான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர், மொரீஷியஸ், செஷல்ஸ், வளைகுடா நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்ரிக்கா முதல் கரீபிய நாடுகள் வரை தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே நமது கொள்கை. மேலும் நம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் ஐ.நா.வின் ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளன.

கொரோனா காலத்தில் நாம் 150 நாடுகளுக்கு மருந்துகள் முக கவசங்கள் பாதுகாப்பு உடைகள் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளோம். அதில் 82 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. நாம் நம்மையும் பராமரித்து உலக மக்களையும் மனிதாபிமான முறையில் ஒருங்கிணைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.