உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.
இதில், நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் நான்கு பெரிய டிரக்குகளில் அழுகிய நிலையில் கிடந்த மனித உடல்களைச் சுமந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக அந்த டிரக்குகள் நின்றிருந்த நிலையில், அதிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த டிரக்குகளில் 12க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தி பாதுகாத்து வருவதாகவும், குளிர்சாதனம் பெட்டி செயலிழந்ததால் உடல்கள் அழுகியதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டுமென இறுதி சடங்குகளை நிர்வகிக்கும் குழு, நியூயார்க் மாகாண சுகாதாரத்துறை அமைச்சகத்துக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.