Hollandtamilan

கொரோனா பாதிப்புடன் நாட்டைவிட்டு வெளியேற முயன்ற நெதர்லாந்து இளம்பெண்: சூரிச் விமான நிலையத்தில் கைது .

நெதர்லாந்து சுற்றுலாப்பயணி ஒருவர் கொரோனா பாதிப்புடன் நாட்டைவிட்டு வெளியேற முயன்ற நிலையில் சூரிச் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டல நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட சூரிச் மண்டல பொலிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பகல் 17 வயதுடைய அந்த சுற்றுலாப்பயணியை கைது செய்துள்ளனர்.

வலாய்ஸ் மண்டலத்தில் வைத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,தனிமைப்படுத்தலில் இருந்த அவர், அங்கிருந்து தப்பி, நெதர்லாந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.நெதர்லாந்து நாட்டவரான அந்த 17 வயது சுற்றுலாப்பயணி, செவ்வாய்க்கிழமை பகல் சூரிச் விமான நிலையம் வழியாக Amsterdam செல்ல திட்டமிட்டதாக மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.சுகாதார அதிகாரிகளால் கட்டளையிடப்பட்ட தனிமைப்படுத்தலைத் தவிர்த்துவிட்டு, வெளிநாட்டு பயணத்திற்கு முயன்ற அவர் சூரிச் மண்டல பொலிஸால் விமான நிலைய வாயிலில் கைது செய்யப்பட்டார்.

 

17 வயதேயான அவர் கொரோனா பாதிப்பு இல்லை என்ற போலியான ஆவணங்களுடன் விமான நிலையம் சென்றுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது தொற்றுநோய் சட்டத்தை மீறியதற்காகவும், ஆவணங்களை மோசடி செய்ததற்காகவும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் வலாய்ஸ் மண்டலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.