ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் வாழைப்பழக் கடை ஒன்றிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏழு பேர், சில குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளுடன் அங்கிருந்து வெளியேறினர்.அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கண்காணித்த பொலிசார், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.
நடந்தது என்னவென்றால், போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, வாழைப்பழம் வைத்திருந்த பெட்டிகளுக்குள் போதைப்பொருள் அடங்கிய பார்சல்களை வைத்து அனுப்பியுள்ளது.ஆனால், தரக்கட்டுப்பாடு செய்யும் ஊழியர் ஒருவர் பெட்டிகளை சோதனையிடும்போது, போதைப்பொருள் பார்சல்களைக் கண்டு, பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பொலிசார் அந்த போதைப்பொருள் அடங்கிய பார்சல்களை கைப்பற்றிவிட்டு, அதேபோல் தோற்றமளிக்கும் பார்சல்களை வைத்து பெட்டிகளை சீல் செய்துவிட்டு, அவற்றை யார் எடுக்க வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக மறைந்திருந்திருக்கிறார்கள். நடந்த எதையும் அறியாமல், அந்த பெட்டிகளை இந்த ஏழு பேரும் தேடி எடுத்து கொண்டு செல்லும்போது பொலிசில் சிக்கியுள்ளார்கள். ஏழு பேரில் ஒருவர் தப்பியோடி விட ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 50 மில்லியன் யூரோக்களாகும்.
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சிக்கியவர்கள் போதைப்பொருளை இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்ப்பவர்கள் மட்டுமே, ஆகவே, அதை அனுப்பியது யார், யாருக்கு செல்கிறது என்ற விடயங்களை அறிந்துகொள்ள முடியவில்லை.சிக்கியவர்களில் இருவர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற நான்கு பேருக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
.