கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ட்விட்டரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.கொரோனா உறுதியானதை அடுத்து தலைநகர் பாரிஸில் உள்ள Elysee அரண்மனையை விட்டு வெளியேறிய மக்ரோன், Versailles-ல் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இல்லமான La Lanterne-ல் தனிமைப்படுத்தலில் இருந்த படி பணியாற்றி வருகிறார்.
மக்ரோனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, கடந்த வாரம் அவரை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
தனிமைப்படுத்தலில் உள்ள மக்ரோன் ட்விட்டரில், நாட்டு மக்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தொடர்ந்து உங்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும். நான் மிகவும் பாதுகாப்பாக மற்றும் கவனத்துடன் இருந்தேன், எல்லாவற்றையும் மீறி, எனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.ஒருவேளை இது கவனக்குறைவின் காரணமாக இருக்கலாம், ஆனால் துரதிர்ஷ்டமாகவும் கூட இருக்கலாம், என மக்ரோன் கூறினார்.
நான் நன்றாக இருக்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நூறாயிரக்கணக்கானவர்களைப் போல எனக்கும் சோர்வு, தலைவலி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன.வைரஸ் பாதிப்பு காரணமாக எனது செயல்பாடு கொஞ்சம் மெதுவாகிவிட்டது, ஆனால் தொற்றுநோய் அல்லது பிரெக்ஸிட் போன்ற முன்னுரிமை சிக்கல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.