பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தினை மாணவர்களுக்கு காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மசூதியை தற்காலிகமாக மூட பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.பாரிஸின் வடகிழக்கு புறநகரில் உள்ள பான்டினின் கிராண்ட் மசூதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறுக்கத்தக்க செய்திகளை பரப்பியவர்கள், சர்ச்சைக்குரிய பிரசங்கங்களின் மதகுருக்கள் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்பப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதன் ஒரு பகுதியாக மசூதியின் தற்காலிக மூடல் கருதப்படுவதாக தனியார் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆறு மாதங்களுக்கு “பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் நோக்கத்திற்காக” காவல்துறையினர் செயல்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் நெருக்கடியில் இருக்கும் ஒரு மதம், இதை நம் நாட்டில் மட்டும் பார்க்கவில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.