Hollandtamilan

தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த குடும்பம்: விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்..

தூதரக அதிகாரியின் குடும்பம் என்ற போர்வையில் தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த நால்வரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜேர்மனியின் மியூனிச் விமான நிலையத்தில் அமைந்துள்ள தனி விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் வெள்ளிக்கிழமை ஈராக்கை சேர்ந்த நால்வர் குடும்பம் ஒன்று குட்டி விமானம் ஒன்றில் தரையிறங்கினர்.குறித்த குடும்பமானது துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து டொமினிகா செல்லும் வழியில் மியூனிச் நகரில் தரையிறங்கியுள்ளனர்.அவர்களிடம் இருந்த ஆவணத்தில் அவர்கள் கரீபியன் மாநிலமான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் தூதரக அதிகாரி என குறிப்பிடப்பட்டிருந்தது…

 

பொதுவாக தூதரக அதிகாரிகள் தங்கள் தாய் மொழியுடன் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களாக இருப்பார்கள்.ஆனால் இந்த குடும்பமானது அவர்களின் தாய் மொழியைத் தவிர அவர்களால் ஆங்கிலம் பேச திணறியுள்ளனர்.இதில் சந்தேகமடைந்த பெடரல் பொலிசார், அவர்களை தனித்தனியாக விசாரித்துள்ளனர்.அப்போது அவர்களின் 12 வயது மகன், தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, தங்களுக்கு ஜேர்மனி அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தான்.

சிறுவனின் தந்தை 49 வயதான Shwana Q தெரிவிக்கையில், தமது மனைவியின் தந்தை இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி தங்களது 7 வயது மகளுக்கு விருத்தசேதனம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும்,எதிர்ப்பு தெரிவித்தால் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டியதாகவும், அதனாலையே நாட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு வந்து சேர்வதற்காக ஒரு கும்பலிடம் அவர்கள் கட்டணமாக 60,000 யூரோ அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.தற்போது அந்த குடும்பத்திற்கு புகலிடக்கோரிக்கையை முன்வைத்து மனு அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றமே முறையான முடிவெடுக்க முடியும் என கூறப்படுகிறது.

காரணம் இவர்கள் மீது ஆவணங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும்.மேலும் ஜேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள காரணத்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.