Hollandtamilan

ஜேர்மனியில் பள்ளிகள் திறப்பு எப்போது: வெளியாகியுள்ள தகவல்!

ஜேர்மனியைப் பொருத்தவரை மாணவ மாணவியர் பள்ளிக்கு சென்று கல்வி கற்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் ஜேர்மனியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் குழந்தைகளின் பகல் நேரக் காப்பகங்களும் இன்னமும் மூடப்பட்டே உள்ளன.ஜேர்மன் அரசியல்வாதியான Lars Klingbeil கூறும்போது, கொரோனா பரவலுக்கு பள்ளிகள் முக்கிய காரணமாக இருக்கும் என கருதப்படும் நிலையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று படிக்கும் நிலை எப்போது உருவாகும் என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனியில் நேற்று புதிதாக 10,315 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு, 312 பேர் பலியாகியும் உள்ளனர்.குறைந்தபட்சம் மேலும் மூன்று வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பகல் நேரக் காப்பகங்களும் மூடப்பட்டுள்ளதால், அத்தகைய குழந்தைகளின் பெற்றோருக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பெடரல் கல்வி அமைச்சரான Anja Karliczek கூறும்போது, கொரோனா பரவல் வீதம் தொடர்ந்து அபாயகரமான அளவுக்கு அதிகமாக உள்ளதால், ஜேர்மனியில் இப்போதைக்கு மாணவ மாணவியர் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.