ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நால்வர் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாலையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.வடக்கு ஜேர்மன் கடற்கரை பகுதியான Stralsund நகரத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள முதியோர் இல்ல ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் முதியோர் காப்பகம் ஒன்றின் 8 ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவை விடவும் 5 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.தவறுதலாகவே இது நடந்தது என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த 8 பேர்களில் நால்வர் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகளுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பதிலளித்த அதிகாரி ஒருவர், இந்த தனிப்பட்ட பாதிப்பானது தனிப்பட்ட பிழைகள் காரணமாகவே நடந்துள்ளது எனவும்,பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எந்தவொரு தீவிரமான பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நால்வரின் தற்போதைய நிலை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.