Hollandtamilan

ஜேர்மனியில் அடுத்த ஆண்டு முதல் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்வதற்கு தடை! நிறைவேறியது புதிய சட்டம்

ஜனவரி 1, 2022 முதல் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்வதை தடை செய்வதற்கான சட்டத்தை ஜேர்மனி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இதன் மூலம் உலகிலேயே ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதை சட்டபடி தடைசெய்த முதல் நாடாக ஜேர்மனி உருவெடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜேர்மனியில் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்ல தடை விதிக்கப்படும் என்று ஜேர்மன் நாடாளுமன்றம் கடந்த  வியாழக்கிழமை அறிவித்தது.ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள பாரம்பரிய கோழிக்குஞ்சு வளர்ப்பு முறை நெறிமுறையற்றது என விமர்சகர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வந்த நிலையில், அதை தடை செய்யும் சட்டத்தை ஜேர்மன் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த மசோதாவை முன்மொழிந்த விவசாய அமைச்சர் Julia Klöckner, ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவது அறத்தின் படி ஏற்றுக்ககொள்ள முடியாத ஒன்று என கூறினார்.உலகெங்கிலும் உள்ள கோழி பண்ணைகள் பாரம்பரியமாக ஆண் கோழிக்குஞ்சுகளை குஞ்சு பொரித்த சிறிது நேரத்தில் கொன்றுவிடுவது வழக்கம்.ஏனெனில் ஆண் குஞ்சுகளால் முட்டையிட முடியாது மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை அல்ல, அதாவது அவற்றை வளர்ப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்பதால் அவை கொல்லப்படுகின்றன.

ஜேர்மனியில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 மில்லியன் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.