Hollandtamilan

ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போதும்: ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்

அறிகுறிகள் இல்லாமலிருந்தும், கொரோனா பரிசோதனையில் கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பதாக தெரியவரும் நபர்களுக்கு, ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி மட்டும் போதும் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, பலர் தங்களுக்கு கொரோனா தொற்றியிருந்தும், தாங்கள் தொற்றுக்கு ஆளாகியிருப்பதை உணராமலே இருந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

உயர்தர ஆன்டிபாடி சோதனை ஒன்றின்மூலம் ஒருவர் தனக்குத் தெரியாமலே அப்படி தொற்றுக்கு ஆளாகியுள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளார் அவர்.

ஜேர்மனியில் தற்போதுள்ள நடைமுறைப்படி, ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதை பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளித்தால் போதும்.

அறிகுறிகள் இல்லாமலே கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுவோர் நான்கு வாரங்களுக்குப் பின் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவருக்கு கொரோனா தொற்றும் வந்து, அவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியும் பெற்றாலே, அவர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக கருதப்படும். ஆகவே, எங்கெல்லாம் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதோ, அங்கெல்லாம் இவர்கள் அனுமதிக்கப்படலாம்.

விரைவில், இந்த விதி அதிகாரப்பூர்வ விதியாக Paul Ehrlich நிறுவனத்தால் அறிவிக்கப்பட உள்ளது.