Hollandtamilan

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் விமான நிலையத்திலேயே பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் விமான நிலையத்திலேயே பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னதாகவே பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தி, பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் தனியான ஓர் இடத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் தங்க வைக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட-19 ஒழிப்பு செயலணி மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் அணுகுமுறைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பீ.சீ.ஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்தும் நோக்கில் விமான நிலையத்திலேயே ஆய்வு கூடமொன்று நிறுவப்பட உள்ளது.

நோய்த் தொற்று பரவுகை நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடும் என்ற காரணத்தினால் நிரந்தரமாக ஆய்வு கூடமொன்று விமான நிலையத்தில் நிறுவப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். முன்கூட்டியே நோயாளிகளை அடையாளம் காணுவதன் மூலம் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.