Hollandtamilan

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த இலங்கையர்… காட்டிக்கொடுத்த பதற்றம்: அவரது வாகனத்தை சோதனையிட்டபோது?

அமெரிக்காவுக்குள்ளிருந்து கனடாவுக்குள் நுழைந்த இலங்கையர் ஒருவர், பதற்றமாக இருந்ததால் பொலிசார் அவரது வாகனத்தை சோதனையிட்டார்கள்.இலங்கையில் பிறந்த ராஜ்குமார் சுப்ரமணியம் 1971ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து ரொரன்றோவில் வாழ்ந்துவந்தார்.தற்போது 49 வயதாகும் ராஜ்குமார் வாஷிங்டனிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குள் தனது வாகனத்தில் நுழைந்துள்ளார். அவர் பதற்றமாக இருந்ததுடன், அமெரிக்காவில் அவர் என்ன செய்தார் என்று கேட்டபோது, குழப்பமான பதில்களைக் கூறியுள்ளார்.

ஆகவே, சந்தேகமடைந்த பொலிசார் அவரது வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். சோதனையில், ராஜ்குமாரின் வாகனத்துக்குள் 33 பொட்டலங்கள் இருந்துள்ளன. அவற்றில் 14.79 கிலோகிராம் போதைப்பொருள் இருந்துள்ளது.அந்த போதைப்பொருள் மொத்தமாக விற்கப்பட்டால், அதன் மதிப்பு 375,000 டொலர்கள், பிரித்து விற்கப்பட்டால் 1.5 மில்லியன் டொலர்கள் ஆகும்.அதைத் தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக எட்டு ஆண்டுகளும், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தண்டனைகளை சமகாலத்தில் அனுபவிக்க இருக்கிறார்.அத்துடன், ஆயுதங்கள் வைத்துக்கொள்ள ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது DNA மாதிரியை கொடுக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.