Hollandtamilan

மியான்மரில் பேஸ்புக்கிற்கு தடை

மியான்மரில் பேஸ்புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.மியான்மரில், கடந்த நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் நடந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றி, ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி, அமோக வெற்றி பெற்றது.

இது, 2015 பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.இதையடுத்து, தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வத்து வந்தனர். எனினும், அதற்கான ஆதாரங்களை, அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் போனது. ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையமும், கடந்த வாரம் நிராகரித்தது.பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.இந்நிலையில், மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம், ‘பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுகிறது. இதனால், நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.