Hollandtamilan

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி..

வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதற்கு தடையில்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி, 49. பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளன. இதற்கான வழக்கு விசாரணை, பிரிட்டன் ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்தாண்டு செப். 7 க்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்த போது பிப். 25-ல் தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சாமுவேல் கூஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது: நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது.
நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.