Hollandtamilan

தாய்மார்களின் மனவேதனையை எதிரொலித்த ரஜினி… எச்சரிக்கையும், அறிவுரையும் கலந்த கீச்சக பதிவு (Twitter).

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கருத்து தமிழக தாய்மார்களின் மனசாட்சியாகவே கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தக் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சி மூலம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அரசின் முடிவுக்கு எதிராக கடுமையாக சீற்றம் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே இன்றைய தினம் அவரது கீச்சக  பதிவு அமைந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக வேலையும், வருமானமும் இல்லாமல் ஏழை எளியோர் தவித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பு குடும்பத் தலைவிகளை கொந்தளிக்க வைத்தது.
இதனால் மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கு போராட்டம் நடத்தியதுடன் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் அவர்களே டாஸ்மாக்கை இழுத்து மூடினர்.

மதுவால் குடும்பம் சீரழிவதாக பெண்கள் அழுகையுடன் அளித்த பேட்டிகளை செய்தித் தொலைக்காட்சிகளில் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த வேதனை கொண்டுள்ளார்.

அரசின் கஜானாவை நிரப்ப பல நல்ல வழிகள் இருப்பதாக ரஜினி கூறிய அறிவுரை தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.