Hollandtamilan

தமிழகத்தில் நேற்று மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ 150 கோடி வசூல்?

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ 150 கோடி வசூலானதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 5700-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 45 நாட்களாக கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மதுபானக் கடைகள் உள்பட கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மதுபான கடைகள் திறக்க அனுமதி இல்லை. இதனால் இங்குள்ள 800 கடைகள் மூடப்பட்டிருந்தன.

அது போல் சென்னையை அடுத்த மற்ற மாவட்டங்களின் எல்லைகளிலும் 900 கடைகள் உள்பட மொத்தம் 1700 கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் காலை 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் குடிகாரர்கள் காத்திருந்தனர். வயது வாரியாக அரசு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தது.