Hollandtamilan

ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான, டாஸ்மேனியா தீவில், 270 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவை, டாஸ்மானியா தலைநகர், ஹோபர்ட் அருகே, மெக்யுயர் ஹெட்ஸ் பகுதியில், ஆழமற்ற நீர்பரப்பில் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.இது குறித்து, டாஸ்மேனியா பூங்கா மற்றும் வனவிலங்கு சேவையின் பிராந்திய மேலாளர், நிக் டெகா கூறியதாவது:


கடந்த, 2009ல், டாஸ்மேனியாவில், 200 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. நியூசிலாந்தில், 2018ல், 100 திமிங்கலங்களை கரை ஒதுங்கியதால் இறந்தன. ஆனால் டாஸ்மேனியாவில், இதுவரை இல்லாத அளவிற்கு, தற்போது தான் இவ்வளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை மீண்டும் ஆழ்கடலில் விடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த திமிங்கலங்களை அழைத்து வந்த, 25 வழிகாட்டி திமிங்கலங்கள் இறந்து விட்டன. அவை ஒவ்வொன்றும், 23 அடி நீளம், 3,000 கிலோ எடை கொண்டவை. திமிங்கலங்கள் ஏன் கூட்டமாக கரையை நோக்கி வந்து உயிர் விடுகின்றன என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கிரிபித் பல்கலை.,யைச் சேர்ந்த, திமிங்கல ஆய்வாளர், ஒலப் மெய்னக் கூறும்போது,” திமிங்கல சமூகங்கள் இடையிலான பிணைப்பு மிக வலுவானது. அதன் காரணமாகவே, அவை கூட்டம் கூட்டமாக, வழிகாட்டி திமிங்கலத்தை பின்பற்றி, கரை ஒதுங்குகின்றன,” என்கிறார்.