Hollandtamilan

கொரோனா தொடங்கியதிலிருந்து முதல் தடவையாக… ஜேர்மனியில் ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்டோர் மரணம்

தடுப்பூசியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதற்கு மத்தியில், ஜேர்மனியில் கொரோனா தொடங்கியதிலிருந்து முதல் தடவையாக ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,129 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் நேற்று  காலை தெரிவித்துள்ளது.ஒரு வாரத்திற்கு முன்பு ஒரே நாளில் 962 உயிரிழந்ததே இதுவரை அதிக பலி எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஜேர்மனியின் மொத்த இறப்பு எண்ணிக்கை 32,107 ஆக அதிகரித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 22,459 பேர் புதிதாக கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.69 மில்லியனாக அதிகரித்துள்ளது என ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா முதல் அலையில் ஜேர்மனி ஒப்பீட்டளவில் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது, ஆனால் சமீபத்திய வாரங்களில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.முக்கிய ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இத்தாலி, இங்கிலாந்து., பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இன்னும் அதிகமான இறப்பு எண்ணிக்கை கொண்டுள்ளது.

ஜேர்மனியில் டிசம்பர் 16 ம் தேதி முதல் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் பெரும்பாலான கடைகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை மூடியிருக்கும்.அடுத்த வாரம் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் மாநில ஆளுநர்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்யும்போது, அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.