Hollandtamilan

கேலி சித்திரம்: பிரான்ஸ் பத்திரிகைக்கு அல்கொய்தா மிரட்டல்

சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை மீண்டும் பதிப்பித்துள்ளதற்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை பாரீசில் அமைந்துள்ள ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டது. இதற்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தின் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெபேன் கார்போனியர் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி என்ற இருவர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை சில நாட்களுக்கு முன் மீண்டும் பதிப்பித்தது. இதற்கு தற்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

 

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சார்லி ஹெப்டோ தொடர்ந்து எங்களை சீண்டுகிறது. அதனால், கடந்த 2015ம் ஆண்டு அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு அனைத்தும் முடிவுற்றதாக கருத வேண்டாம். மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்’ என, தெரிவித்துள்ளது.

இஸ்லாம் மட்டுமின்றி பல்வேறு மதங்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை வெளியிடுவதை சார்லி ஹெப்டோ பத்திரிகை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அந்த பத்திரிகை பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.